Tuesday, June 14, 2022

பெய்யென பெய்து தீர்த்தது

 பெய்யென பெய்கிறது மழை. பொய்யேனு மோர் மழையை உதிர்க்க மறுக்கும் கண்களை பார்த்து சொல்கிறது மனம்: மண்ணில் விழும் மழை பொதுநலத்தின் அடையாளம். கன்னத்தில் விழும் மழை பொதுவாகவே மனநலத்தின் அடையாளம் மட்டுமே. இன்னுமென்ன.

வான் நோக்கிய கண் ஏனோ பெய்யென பெய்து தீர்த்தது.

சொல்லடி சிவசக்தி

 விடிகிற விடியல் எல்லாம் விடியலை நோக்கியே என்றோர் கனமிருந்தது. இன்றும் விடிகிறது. விடியலுக்கான விடியலாகத் தான் இல்லை. திறந்த மனம் இருந்ததோர் காலம். அன்று எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவம், உந்துதல் இருந்தது. தேக்கம் என்பது ஆட்கொண்டவுடன் வாழ்க்கையின் ஓட்டம் எங்கோ நின்றுவிட்டது. புது வேகம், புத்துணர்வு, புது நோக்கம், புது பார்வை, புது அர்த்தமுள்ள வாழ்வு- இவையே மனம் தேடும் மாற்றம். இத்தனை 'புது'வுக்குமான ஓர் அந்த ஓர் உந்து சக்தி எங்கிருக்கிறது? பாரதி கேட்ட அதே- சொல்லடி சிவசக்தி.

சிவசக்தியால் இயலாததையும் இயங்க செய்கிறது இசை.

வண்ணங்கள்

 வண்ணங்களாய் தோன்றும் வானவில்லை வரும் வழியெல்லாம்

காணுகிற போது
வியப்பாய் ரசிக்க வைக்கிறது.
வண்ணங்கள் என்றுமே அழகானவை
வண்ணங்கள் பூசிக் கொள்ளத் தூண்டுபவை
வண்ணங்கள் ஓவியத்தில் அழகை பிரதிபலிப்பவை
வண்ணங்கள் மனிதரிடத்தில் மட்டும் எதிர் வினையாய்.
உதிர்க்கும் புன்னகையில் உருண்டோடும் வினாவாய்- வண்ணம்.
சிரிப்பொலியில் ஓராயிரம் அர்த்தங்களாய் - வண்ணம்.
நேசமான பேச்சில் உள்ளடிங்கியதாய்- வண்ணம்.
ஒரு நொடிப் பார்வையில் பரிமாறப்படும் எண்ணமாய்- வண்ணம்.
தேவைக்கான ஒத்துழைப்பில் ஒன்றியிருக்கும் மௌனத்தில்- வண்ணம்.
சுயத்திற்காக பொங்கியெழும் 'சுய'நலத்தின் வண்ணம்.
பெருவாரியான அநீதியில் அடங்கமறுத்தும் அடக்கப்படும் ஆற்றலின் வண்ணம்.
நேசத்தின் அளவுகோலாய் எங்கோ எதனிடத்திலோ நின்றுவிடுகிற காலத்தின் வண்ணம்.
இன்னும் இன்னும் மின்னும் வண்ணங்களாய்
வண்ணங்களைப் தொடும்போது கைரேகைகளில் அப்பிக்கொள்ளும் வண்ணம்.
சாட்சியாய் பல விரல்கள் ஒன்றுக்கொன்று முரணாய்

சிதறிய சிந்தனை

 வெகுநேரமாக இப்பேனா காகிதத்தில்

ஏதோ பொழிய நினைக்கிறது.
சிதறிய சிந்தனைகளை சீராக்க முயன்று
செயலற்று நிற்கிறது.
இன்று ஏனோ பார்க்கும் முகங்களும்
சூழலும் நினைவுகளும் எண்ணங்களும் இசையும் மனதிற்குள் ஒலிக்கும் பாடல்களும் நிகழ்காலத்தோடு ஒன்றிப்போகிறது.
மண்ணுக்குள் நீராய் கலக்கிறது மனம்.
பார்பவற்றை அப்படியே அள்ளிக்கொள்ளும் மனதை இந்நொடியை இக்காலத்தை
மோதுகின்ற சிலிர்காற்று தந்ததா?
கார்மேகம் சூழும் குதுகலத்தில் மயிலாடும் ஆட்டத்தை உற்றுநோக்கும் மனதை தொட்டுவிட்டு போகும் ஈரக்காற்று தந்ததா?
ஒவ்வொரு தூரலும் தூய்மையின் அடையாளமென்று
இலையின் மேநீரை முகம் தொடச் செய்யுது உயிரோட்டத்தை
மென்காற்று தந்ததா?
புதிதாகிற மனம் நேர்படுகிற பார்வை
கலங்கமறுக்கிற எண்ணம்
இயற்கை நம்மேல் நம்முள் நிகழ்த்தும்
அதிசய ரசாவாதத்தை வேரெது அளித்திடக்கூடும்.
நம்மிலும் மேலான சக்திக்கு இறைவன்
என்றோர் பெயரா? இல்லை
இயற்கை என்றோர் பெயரா?
அது சிந்தனையற்றது
இது சிந்தனையூட்டுவது.