Sunday, September 25, 2022

An outlet on Education

அனைவருக்கும் கல்வி என்று முழங்கும் வேளையில் கிடைத்த கல்வியை எவ்வாறு உபயோகிக்கிறோம் என்றும் யோசிக்க வேண்டும். பள்ளிகள் திறந்து புது பாடங்கள் துவங்கி இருக்கும் வேளையில் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும்,தொலைநோக்கு கல்வியாக அமைய வேண்டும் என்றும் , பல தலைப்புகளில் அனைத்து ஊடகங்கள் வாயிலாக சமூக ஆர்வளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிதுக்கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் கற்கும் கல்வி ஒருவன் சாகும்வரை ஏதோவொரு வடிவில் அவனுடன் பயணித்துக்கொண்டிருக்கும்.பயின்ற முறை, ஆசிரியர், பள்ளிச்சுதந்திரம், ...... என்றெல்லாம்..... பள்ளியின் இறுதி மூன்றாண்டு ஓவருவர் வாழ்விலும் ஒரு அடையாளத்தை பெற்றுத்தருகிறது. இன்றைய சூழலில் அது கௌரவமாக கருதப்படுகிறது. மாணவன் மனிதனாகிறான் என்றிலாமல், சந்தையில் விலைபோகவேண்டும், ஜாக்பாட்டில் ஜெயிக்கவேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கமாகிவிட்டது. 


குறைந்தது பத்து வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறன், அப்பொழுதெல்லாம் நேர்முகத்தேர்வுக்கு தயாராவதற்கு பயிற்சிகள் கொடுப்பதுண்டு. ( இப்பொழுதும் தான்). Stress என்ற வார்த்தை அங்கு அதிகமாக புலங்குவதுண்டு. அதை எவ்வாறு கையாள வேண்டுமென்று சொல்லித்தருவார்கள். அதன் தொடர்ச்சியாக மென்கலை வல்லுனர்கள் தெருவுக்கு ஒன்றாய் முளைத்தனர். விதிவிலக்கின்றி கல்வியும் வியாபாரமாகிவிட, தரத்தைப்பற்றி வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் கவலையில்லை.களிமண்ணில் கூட தங்க முலாம் பூசியிருந்தால் போதுமென்கிறார்கள். பொறியியல் மாணவர்களின் நிலை இப்படி பரிதாபமாக இருக்கிறது. 

யாரை குறை சொல்லவென்று தெரியாத சூழழில் இருக்கிறோம். அவர்களுடைய கனவை பிள்ளைகள் மேல் சுமை ஏற்றுகிறார்கள், தனக்கு கிடைக்காதது தன் பிள்ளைக்காவது கிடைக்கட்டும், பெயருக்குபினால் போட ஒரு பட்டம் போதும்- என்ற பெற்றோரை சொல்வதா? பணம் கட்டிடாங்க சும்மா போவோம், எனக்குப்பிடிக்காத ஒன்றில் சேர்த்து விட்டுடிங்க என் அரியர் தான் உங்களுக்கு தண்டனை- என்று இவர்களை சொல்வதா? 600, 700 என்று மதிப்பெண்கள் வாங்கி பாடங்களை புரியவைத்து, நீங்க 85 சதவிதம்தான் கொடுதிருகீங்க வேற கல்லுரிக்குப்போகலாம் என்று வேலையை, எதிர்காலத்தை பணயம் வைக்கும் ஆசிரியர்களை சொல்வதா? 

புரிந்து படித்தலின் முழு சுவையை இன்றைய மாணவர்கள் இழந்து விட்டனர் என்றே கூறவேண்டும். கால அவகாசம், மதிப்பெண், தேர்சிவிகிதம், குறுகிய காலத்தில் மாவட்ட அளவில், மாநில அளவில் முதல் கல்லூரி என்று வளம்வரவே விரும்பும் நிலைதான் இன்று நிலவுகிறது. மாணவனுடைய சுய விருப்பம், அவனுடைய புரிதல் தன்மை இவை ஏதுமின்றி அவனுக்கு நேர்மாறான திசையில் முடியாத சுமையை ஏற்றி நட என்றுகூட இல்லாமல் ஓடு என்று விரட்டினால் என்ன லாபம். பணம் படைத்தவர்களோ, பொறியியற் கல்லூரிகளை வீதிக்கு ஒன்றாய் ஆரம்பிக்கும் உங்கள் பேராசைக்கு ஒரு முடிவில்லையா? என்று கூட கேட்கத்தோன்றுகிறது. 

கடந்த 10 ஆண்டு காலமாக குறைந்தது 8 ஆண்டு காலமாக மெட்ரிக் பள்ளிகளையும் மிஞ்சுகிறது இம்மாதிரியான கல்லூரிகள். மாணவர்களின் சுயசிந்தனையை முடக்குவதில். முன்பு பெற்றோரின் வருகை கல்லூரிக்கு அதிகமிருக்காது. கலைக்கல்லூரிகளில் அறவே இருக்காது. மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பெற்றோரின் அலைபேசி எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது இன்று. சார் நாங்க இந்த கல்லூரியில்லிருந்து பேசுறோம், உங்க பையன் இன்று கல்லூரிக்கு வரலை உடம்பு சரிலைய? என்று 1 கேள்வி, அதற்கு 100 பதில்கள் கூட வருவதுண்டு. ஏன் என்று காரணம் பின்பு சொல்கிறேன். 1- என் பையனுக்கு உடம்பு சரியில, 2- என்ன சொல்றீங்க நான்தான் ஸ்டாப்ல விட்டுட்டு வந்தேன் 3- பை சாப்பாடு எல்லாம் எடுத்திடுதான சார் வந்தான் 4- என்ன சொல்றீங்க இன்னைக்கு பரீட்சையா? இதோ இப்ப பார்த்து அனுபிடுறேன். அவன எப்டியாவது எழுதுத வைங்க ( கால தாமதமாக வந்தால் அடுத்து 6 மாத சென்று தான் எழுத முடியும் என்று சில பெற்றோருக்கு தெரிவதில்லை, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!) இப்படியாக இன்னும் எத்தனையோ புலம்பல்கள். இப்படி நேர்வதற்கு காரணம் என்ன? ஆர்வத்துடன் பயிலும் எந்த இடத்திலும் இது நேர்வதில்லை. கலைக்கல்லூரிகளில் பாடவேளையில் வகுப்புகளில் இல்லை என்றாலும் கல்லூரிக்குல்தான் எங்காவது இருப்பார்கள். அதிகாரத்தால் குறிப்பாக மதிப்பெண்கள் வைத்து மாணவர்களை வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று எண்ணுவது யாருடைய இயலாமை என்று புரிந்திருக்கும் அல்லவா? 

மதிப்பெண்களையும் தாண்டி ஒரு மாணவனை செயல்பட செய்கிறதெனில் அதுதான் கல்வி. விவசாயம் போன்று பொறியியலாளர்களும் நாட்டினுடைய மிகமுக்கியமான தூண்கள். மாணவ பருவத்தில் ஒருவனுடைய சமூக பார்வையை விரிவடையச் செய்யவில்லை எனில் எப்போதும் அது சாத்தியமாகாது. மதிப்பெண்களின் முக்கியத்துவத்தை போதிக்கும் வேளையில் நன்மதியின் அவசியத்தையும் போதிக்கலாம்.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று மனப்பாட செயுள்ளாக மட்டும்தான் திருக்குறளை நிறுத்திவைக்கின்றோம். பாடத்திட்டத்தில் இவை செயலற்று கிடகின்றனவோ? பாடத்திட்டத்தை தாண்டி மாணவர்கள் சிந்திக்காவிடில் எப்படி கற்ற கல்வியை செயல்முறை படுத்த முடியும்? கவனச்சிதைவு ஏற்படுமென்று சில ஆசிரியர்களும், சில பெற்றோர்களும் பாடத்தை முதலில் படி அதவிட்டுட்டு.....சமூக வலைதளங்களில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் என்று எப்படி சிந்திக்கின்றோமோ அதுபோல மற்றொன்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கருத்துச்சுதந்திரம் அங்கு அதிகம் இருப்பதால் கல்லூரியை விட அங்கு வருகை பதிவு அதிகம் இருக்கிறது. பாட சம்மந்தமாக ஒரு வரி கூட எழுதமுடியாதவர்கள் கவிதை, அரசியல், விளையாட்டு என்பதில் கருத்துகள் எழுதுவதில் மொழி ஆழுமை செழுத்துவது எப்படி? தடையில்லா ஆர்வம் மட்டுமே. ஆர்வத்தை, விழிப்புணர்வை தூண்டும் ஆசிரியர் போதும் நல்சமுகம் அமைய.

கொள்வதற்கு மேல் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் வீனாகுமென்று மற்றொன்டில் தண்ணீர் ஊற்றுகிறோம். மகளை/மகனை அவர்களின் விருப்பம் அவர்களின் திறமை என்னவென்று தெரிந்து வழினடதுவூமேயானால் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாம்தான் பின்புலம் என்பதில் நிம்மதியாக இருக்கலாம். கல்விமுறையில் மக்களின் வீணான போலியான கௌரவத்தில் மாற்றம் நேராமல் எந்தவொரு முன்னேற்றமும் நேர சாத்தியமில்லை.

Tuesday, June 14, 2022

பெய்யென பெய்து தீர்த்தது

 பெய்யென பெய்கிறது மழை. பொய்யேனு மோர் மழையை உதிர்க்க மறுக்கும் கண்களை பார்த்து சொல்கிறது மனம்: மண்ணில் விழும் மழை பொதுநலத்தின் அடையாளம். கன்னத்தில் விழும் மழை பொதுவாகவே மனநலத்தின் அடையாளம் மட்டுமே. இன்னுமென்ன.

வான் நோக்கிய கண் ஏனோ பெய்யென பெய்து தீர்த்தது.

சொல்லடி சிவசக்தி

 விடிகிற விடியல் எல்லாம் விடியலை நோக்கியே என்றோர் கனமிருந்தது. இன்றும் விடிகிறது. விடியலுக்கான விடியலாகத் தான் இல்லை. திறந்த மனம் இருந்ததோர் காலம். அன்று எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவம், உந்துதல் இருந்தது. தேக்கம் என்பது ஆட்கொண்டவுடன் வாழ்க்கையின் ஓட்டம் எங்கோ நின்றுவிட்டது. புது வேகம், புத்துணர்வு, புது நோக்கம், புது பார்வை, புது அர்த்தமுள்ள வாழ்வு- இவையே மனம் தேடும் மாற்றம். இத்தனை 'புது'வுக்குமான ஓர் அந்த ஓர் உந்து சக்தி எங்கிருக்கிறது? பாரதி கேட்ட அதே- சொல்லடி சிவசக்தி.

சிவசக்தியால் இயலாததையும் இயங்க செய்கிறது இசை.

வண்ணங்கள்

 வண்ணங்களாய் தோன்றும் வானவில்லை வரும் வழியெல்லாம்

காணுகிற போது
வியப்பாய் ரசிக்க வைக்கிறது.
வண்ணங்கள் என்றுமே அழகானவை
வண்ணங்கள் பூசிக் கொள்ளத் தூண்டுபவை
வண்ணங்கள் ஓவியத்தில் அழகை பிரதிபலிப்பவை
வண்ணங்கள் மனிதரிடத்தில் மட்டும் எதிர் வினையாய்.
உதிர்க்கும் புன்னகையில் உருண்டோடும் வினாவாய்- வண்ணம்.
சிரிப்பொலியில் ஓராயிரம் அர்த்தங்களாய் - வண்ணம்.
நேசமான பேச்சில் உள்ளடிங்கியதாய்- வண்ணம்.
ஒரு நொடிப் பார்வையில் பரிமாறப்படும் எண்ணமாய்- வண்ணம்.
தேவைக்கான ஒத்துழைப்பில் ஒன்றியிருக்கும் மௌனத்தில்- வண்ணம்.
சுயத்திற்காக பொங்கியெழும் 'சுய'நலத்தின் வண்ணம்.
பெருவாரியான அநீதியில் அடங்கமறுத்தும் அடக்கப்படும் ஆற்றலின் வண்ணம்.
நேசத்தின் அளவுகோலாய் எங்கோ எதனிடத்திலோ நின்றுவிடுகிற காலத்தின் வண்ணம்.
இன்னும் இன்னும் மின்னும் வண்ணங்களாய்
வண்ணங்களைப் தொடும்போது கைரேகைகளில் அப்பிக்கொள்ளும் வண்ணம்.
சாட்சியாய் பல விரல்கள் ஒன்றுக்கொன்று முரணாய்

சிதறிய சிந்தனை

 வெகுநேரமாக இப்பேனா காகிதத்தில்

ஏதோ பொழிய நினைக்கிறது.
சிதறிய சிந்தனைகளை சீராக்க முயன்று
செயலற்று நிற்கிறது.
இன்று ஏனோ பார்க்கும் முகங்களும்
சூழலும் நினைவுகளும் எண்ணங்களும் இசையும் மனதிற்குள் ஒலிக்கும் பாடல்களும் நிகழ்காலத்தோடு ஒன்றிப்போகிறது.
மண்ணுக்குள் நீராய் கலக்கிறது மனம்.
பார்பவற்றை அப்படியே அள்ளிக்கொள்ளும் மனதை இந்நொடியை இக்காலத்தை
மோதுகின்ற சிலிர்காற்று தந்ததா?
கார்மேகம் சூழும் குதுகலத்தில் மயிலாடும் ஆட்டத்தை உற்றுநோக்கும் மனதை தொட்டுவிட்டு போகும் ஈரக்காற்று தந்ததா?
ஒவ்வொரு தூரலும் தூய்மையின் அடையாளமென்று
இலையின் மேநீரை முகம் தொடச் செய்யுது உயிரோட்டத்தை
மென்காற்று தந்ததா?
புதிதாகிற மனம் நேர்படுகிற பார்வை
கலங்கமறுக்கிற எண்ணம்
இயற்கை நம்மேல் நம்முள் நிகழ்த்தும்
அதிசய ரசாவாதத்தை வேரெது அளித்திடக்கூடும்.
நம்மிலும் மேலான சக்திக்கு இறைவன்
என்றோர் பெயரா? இல்லை
இயற்கை என்றோர் பெயரா?
அது சிந்தனையற்றது
இது சிந்தனையூட்டுவது.