Sunday, September 23, 2012

தற்காலிக மனிதர்கள்


     ஓடுகின்ற வாழ்க்கையில் எதை பாடம் என்பது, எதை அனுபவம் என்பது? அதை புகட்டுகிற மனிதர்களில் எத்தனை வேறுபாடுகள். இவர்களை கவனிக்கவும் முடியாது, கவனிக்காமல் இருக்கவும் முடியாது. இவர்களிடம் கல்லைக்/ களிமண்ணைக் கொடுத்தால் கூட அதற்கும் கோபம், இறுக்கம், அழுகை ஆகியவற்றை உணரச்செய்திடுவர். இவற்றை ஆகப்பாதைகோ, அழிவுப்பாதைகோ எடுத்துச்செல்வது அந்தக் களிமண்ணைப் பொருத்தது. பொறுமை எருமையை விட பெரியது என்றும், நிலம்போல் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலையென்றும், நிரந்தரம் என்ற உலகிலல்லவா இவர்கள் என்னை தூக்கிஎரிந்துவிட்ட தற்காலிகமானவர்கள் என்றும், ஆக்கப்பொருத்தவன் ஆறவும் பொறுக்கணும் என்றும், மேதைகள்/ அறிவாளிகள் போல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இவையாவும் அனுபவத்தால் விழைந்த வார்த்தைகள் என்றபோதும் அவர்களின் காரணம் பெரியது. இங்கு அற்ப காரணங்கள். ஆதலால் பக்குவமடைய நேரமும், காலமும் கூடுதலாக செலவடைகிறது. தன்னைப்போல் பிறரையும் நேசி- ஆங்கிலத்தில் Empathy, சிறிய வார்த்தை பெரிய பொருளடக்கம். இது நடந்தேருமாயின் மனிதர்கள் மாமனிதர்களாகிவிடுவர்.

     மனித உருவம் கொடுத்து பல கைகள், கொடுத்து வாசனை திரவியங்கள், மாலை, சில நேரங்களில் பழங்கள்- இவையெல்லாம் கொடுத்து கடவுள் என்று நம்புவர்! நேரம் போவது தெரியாமல் மன்றாடி என் கஷ்டத்திற்கு காரணம்/வடிவம்/தீர்வு சொல் என்று கண்ணீர் வற்றும்வரை அழுவர். அவர்களுக்கு தெரிவதில்லை அந்தக்கடவுள் மௌனமாய் இருந்து இதைத்தான் சொல்கிறதென்று : ' சக மனிதனின் மனதை, கண்ணீரை புரிந்துகொள்வதில்தான் உன் தீர்வு  இருக்கிறது '. பக்தி மார்கத்தில் போவதால் என்னவோ இன்னும் சுயனலப்படுகிறது மனது, ஞான மார்கத்தில் சென்றால் பொதுவுடைமை ஏற்படுமோ? தீர்கமாக இல்லாவிட்டாலும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சாத்தியக்கூறுகளில் நானும் இருப்பதால், இந்த தற்காலிகமானவர்களை என் ஆசானாக பாவிக்கிறேன். (7/8/12 - 10.20pm)

Sunday, February 5, 2012

வெறும் வார்த்தைகள்

தெளிவாய் ஏதும் தோன்றாதபோது எதையாவது பேசுவோம், எழுதுவோமென்று மட்டும் தோன்றும். கேட்பவரை , வாசிப்பவரை ஈர்க்க வேண்டும். கருத்துள்ளதாக இருக்கிறதோ இல்லையோ, கவர்வதாக இருக்கவேண்டும். கருத்தாக இருந்தால் வார்த்தைகளுக்கான தேடலிருக்காது. கவர்வதாக இருந்தால் தேடல் ஆராய்ச்சியையும் விஞ்சும். வார்த்தைகள் இன்று பேசப்படுவதைவிட தட்டப்படுகிறது. பெயர், ஊர், முகம், ஏதும் தேவையில்லை, வெறும் 'கருத்துப்பரிமாற்றம்'. இதயத்திலிருந்து அல்லாமல் விரல்களில் இருந்து  வரும் 'வெறும் வார்த்தைகள்'. உயிரற்ற வார்த்தைகள். கருத்துக்கள் யாவும் கவர்வதில்லை, கவர்பவையாவும் கருத்துக்களில்லை. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்தப்போக்கு வரவேர்கத்தக்கதாய் தோன்றினாலும், இது தேவைதானா என்ற நெருடலும் எழுகிறது.

உதிரும் வார்த்தைகள் யாவும் பெட்டகங்கள் ஆகலாம், குப்பைத்தொட்டிக்கும் போகலாம். உதிர்வது என்றும் அதன் இயல்பு நிலைக்கு திரும்புவதில்லை. இதை அறிந்தவர்கள் என்றுமே பக்குவமாய் கையாள்கிறார்கள், மிஞ்சியவர்கள் நிலை நாம் அறிந்ததே. வார்த்தைகளின் உறுதி போய்ச்சேருபவரையும் தானாக பாவிக்கிறது- உறுதியடைகிறார்கள். வார்த்தைகளின் வசியம் மற்றவராகவே பாவிக்கிறது- மயங்கச் செய்கிறது மண்ணாக்குகிறது.